I am a free bird

பஜ்ஜி

April 14, 2009


கடலை மாவு 300கிராம்
அரிசி மாவு 150கிராம்
சோடாஉப்பு சிறிது
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2ஸ்பூன்
வாழைக்காய் - 1

வாழைக்காயை பஜ்ஜிக்கு ஏற்றவகையில் மெல்லிசாக சீவிக் கொள்ளவும்.

இருமாவுகளையும் கலந்து உப்பு, மிளகாய்தூள், பெருங்காயத்தூள் கலந்து நீர்விட்டு தளர கரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சீவிவைத்துள்ள வாழைக்காய்களை மாவில் முக்கி எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு நன்கு சிவக்கவிட்டு வெந்தவுடன் எடுத்து பறிமாறவும்.

குறிப்பு: மாவு கரைக்கும் போது இட்லிமாவைவிட கொஞ்சம் கெட்டியாக கரைக்கவும். கரைத்தபின்பு அதிக நேரம் மாவை அப்படியே வைக்காமல் உடன் பஜ்ஜியை பொரித்து எடுக்கவும். பெரிய வெங்காயம், கத்தரிக்காய், அப்பளம்,உருளைக்கிழங்கு போன்றவற்றிலும் இதே முறையில் பஜ்ஜி செய்யலாம்.

ஆமவடை


கடலைப்பருப்பு 200கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
பெருஞ்சீரகம் 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
இஞ்சி சிறுதுண்டு
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
கருவேப்பிலை, மல்லித்தழை சிறிது
உப்பு

கடலைப்பருப்பை மூன்றுமணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு பெருஞ்சீரகத்துடன் முக்கால் பாகமாக நீர் விடாமல் கெட்டியாக ஆட்டி வெங்காயம்
இஞ்சி,பச்சைமிளகாய் கருவேப்பிலை,மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக்கி அரைத்த பருப்புடன் போட்டு பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து, எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் மாவை சிறூருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து வட்டமாக வரும்படி அழுத்தி எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை வேகவிட்டு நன்கு சிவந்தவுடன் எடுக்கவும்.

குழிப்பணியாரம்

பச்சரிசி 2 டம்ளர்,
புழுங்கல் அரிசி 2 டம்ளர்
உளுந்து முக்கால் டம்ளர்
தேங்காய்-1
வெல்லம்/கருப்பட்டி-1டம்ளர்(பொடிசெய்தது)
வெந்தயம் 2ஸ்பூன்
ஏலக்காய்பொடி சிறிது
எண்ணெய் தேவையான அளவு

அரிசி,உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு ஊறவைத்து கழுவி அரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவும்.

பணியாரம் ஊற்றும்போது, ஒருபாத்திரத்தில் பொடித்த வெல்லம் தேவையான தண்ணீர் ஊற்றி கொத்திக்க விடவும் கம்பி பாகு வந்தவுடன் இறக்கி வடிகட்டி மாவில் ஊற்றி நன்கு கலக்கி வைக்கவும்.

தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி இரண்டையும் போட்டு கலக்கி அடுப்பில் குழிப்பணியாரசட்டியை வைத்து சூடு ஏறியதும் குழிகளில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவைகுழிகளில் ஊற்றி நன்கு வெந்தத்தும் திருப்பிபோட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பறிமாறுங்கள்.


பால் பணியாரம்

பச்சரிசி 100கிராம்
உளுந்து 75கிராம்
பசும்பால் 200கிராம்
தேங்காய்பால் ஒரு டம்ளர்
சர்க்கரை 100 கிராம்
ஏலக்காய் பொடி சிறிதளவு
எண்ணெய் 400மிலி

அரிசியையும் உளுந்தையும் ஐந்துமணிநேரம் ஊறவைத்து ஒன்றாக வெண்ணெய் போல அரைக்கவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் பொரிக்கும்போது வெள்ளை நிறம் மாறும் முன்பு எடுத்துவிடவும்.

பொரித்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயாராக காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போடவும். சிறிது ஊறியவுடன் எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

மென்மையான சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு பதார்த்தம் இது.

குறிப்பு : பாலை நன்றாக காய்ச்சி இறக்கும் சமயம் தேங்காய்பால், சர்க்கரை ஏலம்பொடி ஆகியவற்றினைச் சேர்த்து இறக்கவும்.



இட்லி




இட்லி

புழுங்கல் அரிசி 300 கிராம்

உளுந்து 75 கிராம்

வெந்தயம் ஒரு ஸ்பூன்


அரிசியையும் உளுந்தையும் தனித் தனியாக 4மணி நேரம் ஊறவைத்து உளுந்தை முதலில் களைந்து நன்கு வெண்ணெய்போல் ஆட்டிக்கொள்ளவும். பின்னர் அரிசியையும் இதே போல் ஆட்டிக்கொள்ளவும். பிறகு இரண்டுமாவையும் கலந்து உப்பு போட்டு பிசைந்து ஐந்திலிருந்து ஆறுமணிநேரம் புளிக்க வைக்கவும்.


மாவை கரண்டி போட்டு நன்கு கலக்கி இட்லி தட்டில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு வெந்தவுடன் இறக்கி அகலமான தட்டில் இட்லிகளை கவிழ்த்து சூடு ஆறும் முன்பு பறிமாறவும்.


இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், இட்லி மிளகாய் பொடி போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.


தோசை மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி 300 கிராமும் உளுந்து 100 கிராமும் ஊறவைத்து அரைக்கவேண்டும். அரைத்தபின் இதே போன்று புளிக்க வைத்து, கலக்கி தோசைக்கல்லில் தோசையாக வார்த்து இருபக்கமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.