I am a free bird

கொத்தமல்லி சாம்பார்

November 19, 2008

கொத்தமல்லி சாம்பார்:

 

தேவையான பொருட்கள்:

 

தேங்காய் அரை மூடி துறுவியது,

கொத்தமல்லி(தனியா) ஒரு கை அளவு,

பொட்டுக்கடலை ஒரு கை அளவு,

சிவப்பு மிளகாய்  8,

பெரியவெங்காயம் 3,

தக்காளி  3,

எண்ணெய்,கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்க தேவையான அளவு,

உப்பு தேவையான அளவு,

கொத்தமல்லித்தழை சிறிதளவு.

 

செய்முறை:

 

தேங்காய், மல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் ஆகியவற்றை நீர் விட்டு நன்கு மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.

 

வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும்

அரைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்கு கலக்கி கொதிக்க ஆரம்பித்தவுடன், கொத்தமல்லித்தழையைக் கிள்ளி போட்டு இறக்கவும்.

 

இது இட்லி, தோசை, சப்பாத்தி, எலுமிச்சை சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

 

உருளைக்கிழங்கு பொரியல்/வறுவல்.

November 18, 2008

உருளைக்கிழங்கு பொரியல்/வறுவல்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 4,
பெரியவெங்காயம் 3,
மஞ்சள் தூள் சிறிது,
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்,
உப்புத்தூள் தேவையான அளவு,
கருவேப்பிலை, கடுகு,உளுந்து, எண்ணெய் தாளிக்கதேவையான அளவு.
கரம்மசாலாத்தூள் ஒரு ஸ்பூன்.

செய்முறை:

உருளைக்கிழங்கை முக்கால் பாகம் வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக்கொள்ளவேண்டும். 

வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பிறகு வானலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு வெடித்ததும், உளுந்து, கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, வெங்காயம் நன்கு வதங்கியாதும்,  மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் போட்டு, கரம் மசாலாத்தூளையும் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்கு வறுத்து எடுக்கவும். 

                                                                        **************************************

உருளைக்கிழங்கை வேகவைக்க நேரம் இல்லையென்றால் இதை வேறு முறையிலும் செய்யலாம்.

உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலுரித்து சிறிது தடிமனாக வட்டவடிவில் நறுக்கி பின் அதை குச்சி வடிவில் நீளம்,நீளமாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்குடன் முன்பே கூறியதுபோல மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் சேர்த்து விரவி,
வானலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு வெடித்ததும்,
 உளுந்து,  கருவேப்பிலைசேர்த்து, பிறகு வெங்காயத்தைச்சேர்த்து வதக்கி, நீளமாக நறுக்கிய உருளைகிழங்கையும் போட்டு கரம்மசாலாத்தூள் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கி எடுக்கவும்.

இரண்டுமுறையில் செய்யும் போதும் சிறு தீயில்(sim) வைத்து வதக்குவது நல்லது

[உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்செய்வதாக இருந்தால் நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கை அப்படியே எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து பிறகு உப்புத்தூள், மிளகுத்தூளோ அல்லது மிளகாய்த்தூளோ சேர்த்து நன்கு விரவி விடவும்.]

தேங்காய் துவையல்

November 10, 2008


தேங்காய் துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் ஒரு மூடி,
(முற்றிய தேங்காய் நல்ல சுவையாக இருக்கும்.) 
புளி அரை நெல்லிக்காய் அளவு,
பெருங்காயம் ஒரு சிட்டிகை,
சிவப்புமிளகாய் (வற்றல்) 12,
உருட்டு உளுந்து ஒரு தேக்கரண்டி,
கடுகு ஒரு தேக்கரண்டி,
கருவேப்பிலை இரண்டு ஈர்க்கு,
உப்பு.

செய்முறை: மிளகாய்,உளுந்து, கடுகு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். பிறகு, தேங்காய் துருவல், புளி,பெருங்காயம் கருவேப்பிலை, உப்பு இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் நைஸ்ஸாகவும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி,  புளி சாதம்,  எலுமிச்சை சாதம், தயிர்சாதம்,  தேங்காய் சாதம் ஆகியவற்றிற்கு தொட்டுச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும். இடியாப்பத்திற்கும் சேர்த்து பிசைந்து சாப்பிட ஏற்றது. இரண்டு நாட்கள் வரை கெடாது. வெளியூர் செல்லும் போது மேலே குறிப்பிட்ட அனைத்து உணவிற்கும் தொட்டு சாப்பிட தனியாக பார்சல் செய்து எடுத்துச்செல்லலாம் கெட்டுப்போகமல் இருக்கும்.

தேங்காயயையும் வறுத்து சேர்த்து அரைக்கலாம். சிலர் இதை விரும்பக்கூடும்.

 இதில் இனிப்பு,புளிப்பு,காரம்,உப்பு என நான்கு வகையான சுவையும் கலந்து இருப்பதால் மிக சுவையாக இருக்கும்.

மணக்கும் குருமா

November 02, 2008

சப்பாத்திக்கு தொட்டுக்கலாம்ல...

சைவக்குருமா:

 

தேவையான பொருள்கள்:

தேங்காய் ஒரு மூடி துறுவியது,

பொட்டுக்கடலை ஒரு கைஅளவு,

பச்சைமிளகாய் 4,

இஞ்சிபூண்டு நறுக்கியது ஒருதேக்கரண்டி

சோம்பு 1 தேக்கரண்டி

இந்த ஐந்து பொருள்களையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பெரியவெங்காயம் 3, தக்காளி 4 நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கடையில் விற்கும் குருமாமசாலா பவுடர் இரண்டு தேக்கரண்டி,

மற்றும் கிராம்பு 2, பட்டை  ஒரு சிறுதுண்டு,  ஏலம் 2,

விருப்பம் இருந்தால் முந்திரி பருப்பு 4,

எண்ணெய் 4 தேக்கரண்டி, உப்பு.

 

முதலில் வாணலியில்  எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, ஏலம், முந்திரி போட்டு வறுத்து,

வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி

அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி

தேவையான அளவு உப்பு போட்டு

மூன்று டம்ளர் நீர் விட்டு

இரண்டு தேக்கரண்டிமசாலாதூள் சேர்த்து

நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும்.

அதிக சுவை விரும்புபவர்கள் மசாலா சேர்த்து கொதிவரும்போது ஒரு டம்ளர்  தேங்காய் பால் சேர்த்து இறக்கலாம்.

இதில் வேகவைத்த காலிப்ளவர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினாலும் நன்றாக இருக்கும்.

இதை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

பூரிக்கு கிழங்கு தொட்டு சாப்பிடபிடிக்காதவர்கள் இந்த குருமாவை வேண்டாம் என கூறவே மாட்டார்கள்.

வயதானவர்கள் பூரியை இந்த குருமாவில் ஊறவைத்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள்.

பட்டை கிராம்பு இல்லாமலும் இதை தயாரிக்கலாம்.

 

காலிஃப்ளவர் மசால்தோசை


காலிஃப்ளவர் மசால் தோசை:

 

தேவையானவை:

காலிப்ளவர்  - 1,

சீரகம் - 1 தேக்கரண்டி,

இஞ்சிபூண்டு அரைத்து - 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 3,

பெரியவெங்காயம் - 4,

தக்காளி - 3,

எண்ணெய் 3 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி,

மல்லித்தூள் 3 தேக்கரண்டி

 

செய்முறை: முதலில் காலிஃப்ளவரை தூண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு நன்றாக அலசி சிறிது மஞ்சள்தூள், சிறிது உப்புத்தூள் போட்டு கலந்து பின் நன்கு வேகவிடவும்.(சில காலிப்ளவரில்  புழு இருக்கும் அதனால்  சுடு நீரில் அலசிய பின் வேகவைக்கவேண்டும்)

பிறகு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு எறியதும் 1 தேக்கரண்டி சீரகம்,  பின் இஞ்சிபூண்டு அரைத்தது,  பின் பச்சைமிளகாய் 3 நறுக்கியது,  அத்துடன் பெரியவெங்காயம் தக்காளி நறுக்கியது போட்டு நன்கு கிளறி பின்னர் வேகவைத்த காலிப்ளவர் தூண்டுகளை சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு தேவையான அளவு போட்டு சிறிது நீர் விட்டு நன்கு கிளறி வேகவைத்து இறக்கவும்.  சூடான சுவையான காலிப்ளவர் மசால் ரெடி

இதை தோசையின் உள்ளே வைத்து காலிஃப்ளவர் மசால் தோசையாக வார்த்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.