I am a free bird

கொண்டைக் கடலை கறி.

March 20, 2009


கொண்டைக் கடலை கறி.

வெள்ளை கொண்டைகடலை 250கிராம்
தக்காளி 4, வெங்காயம் 1, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு 5 பல்,
மிளகாய் தூள் 1 ஸ்பூன், தனியாத்தூள் 3 ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை அளவு,
கருவேப்பிலை, கடுகு தாளிக்க, உப்பு தேவைக்கு

முதல் நாளே கொண்டைக்கடலையை தேவையான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.

நன்றாக ஊறியவுடன் நீரை மட்டும் இறுத்துவிட்டு, கடலையுடன் உப்பு சேர்த்து வேகத் தேவையான நீர் ஊற்றி வேகவிடவும்.

வெங்காயம், தக்காளி,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் கடுகு வெங்காயம், தக்காளி இஞ்சி, பூண்டு,ஆகியவற்றைப் போட்டு வதக்கி, அத்துடன் தனியத்தூள், மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் நன்கு வெந்த கொண்டைக்கடலையைச் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

பூரி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நல்ல சுவையான ஒரு கறி .

தேங்காய் கொழுக்கட்டை

March 20, 2009

தேங்காய் கொழுக்கட்டை:

பச்சரிசி மாவு 5கப், (பச்சரிசியை ஊறவைத்து, உலர்த்தி, சிறிது ஈரப்பதத்துடன் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.)
வெல்லம் கால் கிலோ,(தூளாக்கிக் கொள்ளவும்)
தேங்காய் துருவல் 1 கப்,
நெய் ஒரு ஸ்பூன், ஏலப்பொடி 1/2 ஸ்பூன்,
உப்பு தேவைப்பட்டால்.

வாணலியை சூடாக்கி தேவையான தண்ணீர் விட்டு தூளாக்கிய வெல்லத்தைப் போட்டு,
பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.


வெல்லப் பாகு இளஞ்சூட்டுடன் இருக்கும் போதே பச்சரிசி மாவு, சிறிது உப்பு, தேங்காய் துருவல் , எலம் , நெய் சேர்த்து கிளறி கையினால் கொழுக்கட்டைகளாக பிடித்து
இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவிட்டு, இறக்கி சூடாக பரிமாறவும்.

குழந்தைகளுக்கு மாலைவேளையில் கொடுக்க சிறந்த உணவு.

பூர்ண கொழுக்கட்டை

March 16, 2009


பூர்ண கொழுக்கட்டை

பச்சரிசி 1/2கிலோ, வெல்லம்350கி, தேங்காய் 1
ஏலக்காய் 6
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு

பச்சரிசியை நன்றாக ஊற வைத்து ஊறிய பின் நீரை வடித்துவிட்டு கெட்டியான மாவாக சிறிது உப்பைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

வாணலி சூடான பின் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு மாவை அதில் போட்டு, கெட்டியாக வரும் வரை கிளறி வைத்துக்கொள்ளவும்.

தேங்காயை துருவி விழுதாக அரைத்துக்கொண்டு, அதனுடன் பொடித்து வைத்துள்ள வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாக கிளற வேண்டும்.

பிறகு மாவை சிறிது சிறிதாக உருட்டி கையில் வைத்து சிறிய பூரி போல் தட்டி, அதில் ஒரு கரண்டி பூரணம் வைத்து இருஓரமும் ஒரே பக்கத்தில் வறுமாறு மடித்து நன்றாக ஒட்டவும்.

அனைத்து மாவையும் இதேபோல் கொழுக்கட்டையாக செய்தபிறகு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வரை ஆவியில் இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.

வெந்தபின் இறக்கி சாப்பிட சூடான பூரண கொழுக்கட்டை ரெடி.

குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் சூடாகத் தர, விரும்பிச் சாப்பிடுவார்கள்

கொண்டைக்கடலை மசாலா சுண்டல்.

March 12, 2009

கொண்டைக்கடலை மசாலா சுண்டல்.

வெள்ளைக் கொண்டைக்கடலை கால் கிலோ.
பச்சை மிளகாய் 2, பட்டை2, கிரம்பு 1, சோம்பு சிறிது, தேங்காய் துருவல் கால் கப்
உப்பு, எண்ணெய் தேவைக்கு

வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் ஊறவைத்து காலையில் குக்கரில் தேவையான உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

பட்டை, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்

வாணலி சூடானபின் எண்ணெய் விட்டு சிறிதளவு கடுகு, உ. பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்தவுடன், வேகவைத்த கடலையையும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு கிளறி நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்

தீயல்

March 08, 2009

தீயல்:

தேவை
சின்ன வெங்காயம் 1/4கிலோ
சேனைக்கிழங்கு 1/4கிலோ
பாகற்க்காய் 1
புளி எலுமிச்சம்பழம் அளவு
மிளகாய் வற்றல் 8
தனியா 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் ஒன்று
தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
உப்பு தேவைக்கு
கடுகு தாளிக்க

செய்முறை:

வெங்காயம், பாகற்க்காயை மெல்லியதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவி வைக்கவும்.

புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி வெங்காயம் பாகற்க்கயை நன்கு வதக்கி தனியாக வைக்கவும்

மேலும் ஒரு ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் தனியாவை கருகாமல்
வறுக்கவும்.

அதே வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

சேனைக்கிழங்கை கழுவி அதனுடன் வதக்கிய வெங்காயம் பாகற்காய் மஞ்சள் தூளை சேர்த்து வேக விடவும்.

வறுத்த மிளகாய்வற்றல், மல்லி, தேங்காயை வெண்ணெய் போல் அரைக்கவும். காய் வெந்தவுடன் புளியைஊற்றிவிடவும்.

கொதித்தவுடன் உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்க்கவும்.

கொதித்து கெட்டியானதும் கடுகு, மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

இந்த தீயல் சாதம், தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.